அமைச்சு - நல்ல அமைச்சன்
குறள் வரிசை
குறள்:631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
குறள் விளக்கம்:

செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் முறையும், செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

குறள்:632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
குறள் விளக்கம்:

அஞ்சாமை, நற்குடிப்பிறப்பு, மக்களைக் காத்தல், நீதி நூல்களைக் கற்றறிதல், முயற்சியுடைமை ஆகிய ஐந்திலும் மாட்சிமையுடையவனே அமைச்சனாவான்.

குறள்:633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.
குறள் விளக்கம்:

பகைவர்க்கு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் துணையானவரைக் காத்தலும், தம்மை விட்டுப் பிரிந்தவரைத் தம்மோடு சேர்த்தல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.

குறள்:634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
குறள் விளக்கம்:

செய்வதற்குரிய செயல் பற்றி ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், அறிவுரைகளைத் துணிந்து சொல்லுதலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.

குறள்:635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
குறள் விளக்கம்:

அறங்களை அறிந்து, அறிவு நிறைந்த சொல்லையுடையவனாய், எப்பொழுதும் செயல்களைச் செய்யும் வழிகளை அறிந்தவன், ஆலோசனை கூறுதற்குரிய துணையாவான்.

குறள்:636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்னிற் பவை.
குறள் விளக்கம்:

மதிநுட்பத்தோடு நூலறிவும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?.

குறள்:637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
குறள் விளக்கம்:

ஒரு செயலைச் செய்தற்குரிய வழியை நூல் மூலம் அறிந்திருப்பினும், உலக இயல்பையும் அறிந்து, அதன்படி செய்யவேண்டும்.

குறள்:638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
குறள் விளக்கம்:

அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல் உள்ள அரசனுக்கு நல்லன கூறுதல் அமைச்சரின் கடமையாகும்.

குறள்:639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
குறள் விளக்கம்:

அருகில் இருந்து தீங்கு செய்ய எண்ணும் அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருத்தல் நன்மை தரத்தக்கதாகும்.

குறள்:640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
குறள் விளக்கம்:

செயலைச் செய்து முடிக்கும் திறமையில்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வர்.