அலர் அறிவுறுத்தல்
குறள் வரிசை
குறள்:1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
குறள் விளக்கம்:

எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

குறள்:1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
குறள் விளக்கம்:

மலர்போன்ற கண்களை உடையவள் அருமையை அறியாது இவ்வூர், இவனோடு இவளுக்குத் தொடர்புண்டு என்று தூற்றுதலால் அவளை எனக்குக் கொடுத்தது.

குறள்:1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
குறள் விளக்கம்:

இவ்வூரவர் அறிதலால் உண்டான தூற்றுதல் எனக்குப் பொருந்தாதோ? அவள் சேர்கையைப் பெறாதபோதே பெற்றது போன்ற இன்பத்தைத் தரும் தன்மையுடையது.

குறள்:1144
கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
குறள் விளக்கம்:

எனது காமம், இவ்வூரவர் கூறுகின்ற தூற்றுதலால் வளர்ந்து வருகின்றது; அத்தூற்றுதல் இல்லையென்றால், அது இன்பம் தருதலை இழந்து சுருங்கிப்போகும்.

குறள்:1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
குறள் விளக்கம்:

கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

குறள்:1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
குறள் விளக்கம்:

நான் காதலரைக் கண்டது ஒருநாளே; அதனால் எழுந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.

குறள்:1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
குறள் விளக்கம்:

இக்காதல் நோயாகிய பயிர், ஊராரின் தூற்றுதலை எருவாகவும், தாயின் கடுங்சொல்லை நீராகவும் கொண்டு வளரும்.

குறள்:1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
குறள் விளக்கம்:

தூற்றுதலினால் காதலை அடக்குவோம் என்று எண்ணுதல், எரிகின்ற நெருப்பை நெய்யால் அணைப்போம் என எண்ணுதல் போன்றது.

குறள்:1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
குறள் விளக்கம்:

‘அஞ்சாதே’ என்று சொன்ன காதலரே, பலர்முன் நாணும்படி பிரிந்து சென்றபின், நான் பிறர் தூற்றுவதற்கு நாணுவேனோ?

குறள்:1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
குறள் விளக்கம்:

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரவர் தாமே பரப்புகின்றனர். இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை ஏற்றுக்கொள்வர். அதனால் இவ்வலர் எனக்கு நன்றாயிற்று.