அவை அஞ்சாமை
குறள் வரிசை
குறள்:721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
குறள் விளக்கம்:

சொற்களைத் தொகுத்துக் கூறும் முறையினை அறிந்த தூய்மை உடையவர், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

குறள்:722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
குறள் விளக்கம்:

கற்றவரின் முன் தாம் கற்றறிந்தவற்றை அவர்கள் ஏற்குமாறு சொல்லுபவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

குறள்:723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
குறள் விளக்கம்:

பகைவர் உள்ள போர்க்களத்தில் அஞ்சாமல் சென்று சாகத் துணிந்தவர் உலகத்தில் பலராவர்; அவையில் அஞ்சாமல் சென்று பேச வல்லவர் சிலரேயாவார்.

குறள்:724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
குறள் விளக்கம்:

கற்றோர் உள்ள அவையில் தாம் கற்றவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லித் தாம் கற்றவற்றைவிட அதிகமான பொருளை அதிகமாகக் கற்றவரிடத்தில் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

குறள்:725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.
குறள் விளக்கம்:

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

குறள்:726
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
குறள் விளக்கம்:

வீரம் இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன் இருக்கின்றது? அதுபோல அறிவுடையோர் அவையில் அஞ்சுகின்றவர்க்க்கும் நூலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?.

குறள்:727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
குறள் விளக்கம்:

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் பேடித் தன்மையுள்ளவன் கையில் பிடித்த கூரிய வாளுக்குச் சமம்.

குறள்:728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
குறள் விளக்கம்:

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

குறள்:729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.
குறள் விளக்கம்:

நூல்களைக் கற்றிந்த போதிலும் அறிவுடையோர் உள்ள அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவராவர் என்று அறிவுடையோர் கூறுவர்.

குறள்:730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
குறள் விளக்கம்:

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.