அவை அறிதல்
குறள் வரிசை
குறள்:711
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
குறள் விளக்கம்:

சொற்களைப் பயன்படுத்தத் தெரிந்த தூய குணமுடையவர், ஒன்றைப் பற்றிப் பேச முற்படும்போது, அப்போதைய அவையினர் இயல்பினை அறிந்து, அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து பேசுவார்கள்.

குறள்:712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
குறள் விளக்கம்:

சொற்களின் வகையை ஆராய்ந்தறிந்த நல்லறிவுடையவர், சமயமறிந்து குற்றப்படாமல் தெளிந்து சொல்ல வேண்டும்.

குறள்:713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
குறள் விளக்கம்:

தம் பேச்சைக் கேட்கும் அவையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் வகையும் தெரியாதவர்; பேசும் திறமையும் இல்லாதவர்.

குறள்:714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
குறள் விளக்கம்:

அறிவுடையோர் முன் அறிவுடையோராகப் பேசுதல் வேண்டும். அறியாதவர்முன் அறியாதவர் போல் பேசுதல் வேண்டும்.

குறள்:715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
குறள் விளக்கம்:

தம்மைவிட அறிவால் மேம்பட்டவர் இருக்கும் அவையில் முன்னே முந்திச் சென்று பேசாத அடக்கம், நல்லன என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்களுள் நல்லதாகும்.

குறள்:716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
குறள் விளக்கம்:

அகன்ற நூல்பொருள்களை அறிந்து, அதன் மெய்ம்மையை உணரவல்லவர் அவையின் முன்னே ஒருவன் சொற்குற்றப்படுதல், ஒழுக்க நெறியில் செல்கின்றவன் நிலைதளர்ந்து கெட்டு வீழ்வது போலாகும்.

குறள்:717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து.
குறள் விளக்கம்:

சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும்.

குறள்:718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
குறள் விளக்கம்:

உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளர்கின்ற பயிர் நின்ற பாத்தியுள் தண்ணீரை ஊற்றுவது போன்றதாகும்.

குறள்:719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்.
குறள் விளக்கம்:

நல்லோர் இருக்கும் அவையில், அவர்கள் மனத்தில் பதியுமாறு நல்ல பொருள்களைச் சொல்ல வல்லவர், அறிவிலார் உள்ள அவையில் எதையும் மறந்தும் சொல்லக் கூடாது.

குறள்:720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
குறள் விளக்கம்:

அறிவால் தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.