இரவச்சம் - வறுமையில் செம்மை
குறள் வரிசை
குறள்:1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்.
குறள் விளக்கம்:

தம்மிடத்தில் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் படியான கண்போன்ற சிறந்தவரிடத்திலும் இரவாமல் இருத்தலே கோடி மடங்கு நல்லது.

குறள்:1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
குறள் விளக்கம்:

இவ்வுலகத்தைப் படைத்தவன் இரந்தும் உயிர் வாழவேண்டும் என்று விதித்தானாயின், அவன் எங்கும் அலைந்து கெடுவானாக.

குறள்:1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
குறள் விளக்கம்:

வறுமையால் வரும் துன்பத்தை இரந்து தீர்ப்போம் என, முயற்சியைக் கைவிட்ட கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.

குறள்:1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
குறள் விளக்கம்:

வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத பண்பு, உலகமெல்லாம் கொள்ள முடியாத பெருமையுடையது.

குறள்:1065
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலி னூங்கினியது இல்.
குறள் விளக்கம்:

தன் முயற்சியினால் வந்தது தெளிந்த நீர் போன்று சமைத்த கூழேயாயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

குறள்:1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
குறள் விளக்கம்:

‘இப்பசுவுக்குத் தண்ணீர் தாருங்கள்’ என்று பிறரை இரத்தலும் ஆகாது; அவ்விரத்தல் போல ஒருவனுடைய நாவிற்கு இழிவு தருவது வேறு இல்லை.

குறள்:1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
குறள் விளக்கம்:

இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்கவேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்!

குறள்:1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
குறள் விளக்கம்:

இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத மரக்கலம் கொடுக்காமல் மறைத்தல் எனும் வலிய பாறையோடு தாக்கினால் பிளந்துவிடும்.

குறள்:1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
குறள் விளக்கம்:

இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரையும்; இல்லை என்று சொல்லுவதன் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து போகும்.

குறள்:1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
குறள் விளக்கம்:

இரப்பவர் ‘இல்லை’ என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ?