இறைமாட்சி - ஆட்சியின் இலக்கணம்
குறள் வரிசை
குறள்:381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
குறள் விளக்கம்:

படையும், குடிமக்களும், நிறைந்த பொருளும், அமைச்சனும், நட்பினரும், கோட்டையும் ஆகிய ஆறினையும் குறைவில்லாது உடையவனே அரசர்களுள் சிங்கம் போன்றவன் ஆவான்.

குறள்:382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
குறள் விளக்கம்:

மனஉறுதி, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

குறள்:383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
குறள் விளக்கம்:

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

குறள்:384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
குறள் விளக்கம்:

நீதி நெறியில் தவறாது நின்று, குற்றங்களைப் போக்கி, வீரத்தில் குறையாத பெருமையுடையவன் சிறந்த அரசனாவான்.

குறள்:385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
குறள் விளக்கம்:

பொருள் வரும் வழிகளை உருவாக்குவதும், பொருள்களைச் சேர்த்தலும், பாதுகாத்தலும், அதனை நல்வழியில் செலவிடுதலிலும் வல்லவனே அரசனாவான்.

குறள்:386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
குறள் விளக்கம்:

அரசன், குறைகளைத் தெரிவிக்கவரும் குடிமக்களுக்குக் காண்பதற்கு எளியவனாகவும், கடுஞ்சொல் இல்லாதவனாகவும் இருப்பானானால், அவ்வரசனது நாட்டை உலகத்தவர் உயர்வாகக் கூறுவர்.

குறள்:387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
குறள் விளக்கம்:

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு, இந்த உலகத்திலேயே அவன் விரும்பிய பொருளெல்லாம் கிடைக்கும்.

குறள்:388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
குறள் விளக்கம்:

நீதிசெலுத்தி மக்களை வருத்தாமல் காக்கின்ற அரசன், பிறப்பால் மனிதனாயினும் செயலினால் கடவுள் என்று மதிக்கப்படுவான்.

குறள்:389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
குறள் விளக்கம்:

குறை கூறுபவரின் சொற்கள், தன் காதுகட்குக் கசப்பாயிருப்பினும், அவற்றின் பயன்கருதி அவற்றைப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனின் குடைக்குக் கீழ் உலகம் முழுதும் தங்கும்.

குறள்:390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
குறள் விளக்கம்:

கொடையும், அன்பும், செங்கோல் முறையும், குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவனாவான்.