உட்பகை
குறள் வரிசை
குறள்:881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
குறள் விளக்கம்:

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

குறள்:882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
குறள் விளக்கம்:

வாள்போல வெளிப்படையாய்த் துன்பம் செய்யும் பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினர் போன்று மறைந்து நிற்கும் பகைவர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.

குறள்:883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
குறள் விளக்கம்:

உட்பகை கொண்டிருப்பவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு காத்துக் கொள்ளவில்லையென்றால், அந்த உட்பகை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போலத் தவறாமல் அழித்துவிடும்.

குறள்:884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவுந் தரும்.
குறள் விளக்கம்:

மனம் திருந்தாத உட்பகைவர் உண்டானால், சுற்றத்தார் கலவாமைக்குக் காரணமான குற்றங்கள் பலவற்றையும் அவர் செய்வர்.

குறள்:885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
குறள் விளக்கம்:

நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.

குறள்:886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
குறள் விளக்கம்:

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

குறள்:887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
குறள் விளக்கம்:

செப்பும் அதன் மூடியும் காண்பதற்கு ஒன்றுபட்டிருப்பது போல் தோன்றினும் வேறுபட்டிருப்பது போல் உட்பகை கொண்டவர்களும் உள்ளத்தால் கூடியிருக்க மாட்டார்; பிரிந்தே இருப்பர்.

குறள்:888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
குறள் விளக்கம்:

அரம் இரும்பினைத் தேய்த்துக் குறைப்பதுபோல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் அப்பகையால் தேய்வுண்டு வலிமை குறையும்.

குறள்:889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
குறள் விளக்கம்:

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

குறள்:890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
குறள் விளக்கம்:

மனப்பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் கூடி வாழ்வது, ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு வாழ்வது போலாகும்.