ஒப்புரவறிதல் - பொதுவான அறங்களை அறிந்து செய்தல்
குறள் வரிசை
குறள்:211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
குறள் விளக்கம்:

உலக உயிர்களுக்கு மழை தருகின்ற மேகங்களுக்கு அவ்வுயிர்கள் என்ன கைம்மாறு செய்ய இயலும். அதனால், அம்மேகங்களைப் போன்றவர்கள் செய்யும் உதவியும் கைம்மாறு கருதி செய்யப்படுவன அல்ல.

குறள்:212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
குறள் விளக்கம்:

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

குறள்:213
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
குறள் விளக்கம்:

தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

குறள்:214
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
குறள் விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

குறள்:215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
குறள் விளக்கம்:

உலகத்தார் நன்றெனக் கொண்டவற்றை விரும்பிச் செய்யும் அறிவாளியின் செல்வம், ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

குறள்:216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
குறள் விளக்கம்:

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், அது ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

குறள்:217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
குறள் விளக்கம்:

உதவி செய்யும் பெருந்தன்மை யுடையவனிடத்தில் செல்வம் உண்டானால், அது தனது எல்லா உறுப்புகளும் மருந்தாகி நோயைத் தவறாது தீர்க்கும் மரம் போன்றதாகும்.

குறள்:218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
குறள் விளக்கம்:

செய்யவேண்டிய கடமையை அறிந்த நல்லறிவுடையோர், தம்மிடம் செல்வம் இல்லாக் காலத்திலும், பிறர்க்கு உதவி செய்வதற்குத் தளரமாட்டார்.

குறள்:219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
குறள் விளக்கம்:

உதவி செய்யும் குணமுடையவன் வறியவனாவது எவ்வகையில் என்றால், பிறர்க்கு உதவ முடியாத நிலைமையை அடைதலாகும்.

குறள்:220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
குறள் விளக்கம்:

பிறர்க்கு உதவி செய்வதால் பொருட்கேடு உண்டாகும் என்றால், ஒருவன் தன்னை விற்றாயினும் வாங்கும் தகுதி உடையது அது.