கண்ணோட்டம் - இரக்கமெனும் கண்
குறள் வரிசை
குறள்:571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
குறள் விளக்கம்:

இரக்கம் என்று சொல்லப்படும் மிகப்பெரிய அழகு அரசனிடம் இருப்பதனால் தான், இந்த உலகம் அழியாமல் நிலைத்திருக்கிறது.

குறள்:572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
குறள் விளக்கம்:

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

குறள்:573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
குறள் விளக்கம்:

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?

குறள்:574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
குறள் விளக்கம்:

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?

குறள்:575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
குறள் விளக்கம்:

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண் என்று உணரப்படும்.

குறள்:576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
குறள் விளக்கம்:

இரக்கத்தைக் காட்டும் கண்களை உடையவராயிருந்தும் இரக்கத்தை காட்டாதவர், மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரத்தினைப் போன்றவர்.

குறள்:577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
குறள் விளக்கம்:

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

குறள்:578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
குறள் விளக்கம்:

கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

குறள்:579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
குறள் விளக்கம்:

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் இரக்கம் கொண்டு( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

குறள்:580
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
குறள் விளக்கம்:

கருணை உள்ளமும் நாகரிகமான பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதனை உண்டு அவரோடு கலந்திருப்பர்.