கண்விதுப்பழிதல் - காத்திருக்கும் கண்கள்
குறள் வரிசை
குறள்:1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
குறள் விளக்கம்:

கண்கள் எனக்குக் காதலரைக் காட்டியதாலன்றோ இத்தீராத நோயை அனுபவிக்கின்றேன்; இவ்வாறு எனக்கு நோயை உண்டாக்கிய கண்கள் இப்பொழுது அழுவது ஏனோ?

குறள்:1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.
குறள் விளக்கம்:

பின் வருவதனை ஆராய்ந்து அறியாது அன்று காதலரைக் கண்ட மையுண்ட கண்கள், இன்று இது நாமே ஆக்கிக் கொண்டது எனப் பொறுத்திராது துன்பம் அனுபவிப்பது என்ன காரணம் கருதி?

குறள்:1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து.
குறள் விளக்கம்:

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன. இக்கண்களின் அறியாச் செயல் சிரிக்கத்தக்கதாகும்.

குறள்:1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
குறள் விளக்கம்:

மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

குறள்:1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
குறள் விளக்கம்:

கடலும் சிறியதாகும்படி பெரிய காதல் நோயைச் செய்த என் கண்கள், தூங்கமுடியாதபடி வருத்தத்தை அனுபவிக்கின்றன.

குறள்:1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
குறள் விளக்கம்:

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!.

குறள்:1177
உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்.
குறள் விளக்கம்:

முன்பு அவரைக் கண்டு விரும்பி, உருகி, இடைவிடாது பார்த்த கண்கள், இப்பொழுது அழுது அழுது வருந்தி நீர் வற்றிப் போகட்டும்.

குறள்:1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
குறள் விளக்கம்:

காதலர் மனத்தால் விரும்பாதவராகிச் சொல்லால் மட்டும் விரும்புபவராய் இருக்கின்றார், எனினும் கண்கள் அவரைக் காணாமல் பொறுமையுடன் இருக்கமாட்டா.

குறள்:1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
குறள் விளக்கம்:

காதலர் வராதபொழுது அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்து என் கண்கள் தூங்குவதில்லை. வந்தபொழுது எங்கே பிரிந்து விடுவாரோ என அஞ்சித் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்கள் தாங்க ஒண்ணாத துன்பத்தை உடையவாயின.

குறள்:1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் ரகத்து.
குறள் விளக்கம்:

அடிக்கப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவர் மனத்திலுள்ளவற்றை அறிதல் ஊரவர்க்கு அரிதன்று.