கல்லாமை - படிக்காமையால் வரும் இழிவு
குறள் வரிசை
குறள்:401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
குறள் விளக்கம்:

அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கல்லாமல், ஒருவன் அவையின் கண் ஒரு பொருளைப் பற்றிக் கூறுதல் என்பது சூதாடும் களத்தை வகுத்துக் கொள்ளாமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

குறள்:402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
குறள் விளக்கம்:

கல்வி அறிவில்லாதவன் கற்றோர் அவையில் பேச விரும்புதல், இரண்டு தனங்களும் இல்லாத பெண், பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

குறள்:403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
குறள் விளக்கம்:

கற்றவர் உள்ள சபையில் யாதொன்றையும் பேசாதிருப்பின், கல்லாதவரும் மிக நல்லவராகக் கொள்ளப் படுவார்.

குறள்:404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
குறள் விளக்கம்:

நூல்களைக் கல்லாதவனது அறிவு மிக நன்றாகவிருப்பினும், அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

குறள்:405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
குறள் விளக்கம்:

கல்லாத ஒருவன் தன்னைத்தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு கற்றவன் அவனைக் கண்டு உரையாட, அப்பேச்சினால் கெடும்.

குறள்:406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
குறள் விளக்கம்:

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

குறள்:407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
குறள் விளக்கம்:

நுண்ணியதாய் மாட்சிமைப்பட்டு ஆராயும் அறிவில்லாதவனது அழகின் சிறப்பு, மண்ணால் மாண்புறச் செய்யப்பட்ட பாவையின் அழகு போன்றதாகும்.

குறள்:408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
குறள் விளக்கம்:

கற்றவரிடத்தில் உண்டான வறுமையைவிடக் கல்லாதவனிடத்தில் உண்டான செல்வம் மிக்க துன்பத்தைக் கொடுக்கும்.

குறள்:409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
குறள் விளக்கம்:

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

குறள்:410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
குறள் விளக்கம்:

விலங்கோடு நோக்க மக்கள் எவ்வளவு மேன்மையுடையவரோ, அவ்வளவு தாழ்ந்தவர் நூலைக் கற்றவரோடு நோக்கக் கல்லாதவர்.