கள்ளாமை - பிறர் பொருள் விரும்பாமை
குறள் வரிசை
குறள்:281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
குறள் விளக்கம்:

பிறரால் இகழப்படாமல் இருக்க ஒருவன் விரும்புவானாயின் பிறருடைய சிறிய பொருளாயினும், அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாதபடி, தன் நெஞ்சினைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

குறள்:282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
குறள் விளக்கம்:

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

குறள்:283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
குறள் விளக்கம்:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றினாலும், பின்னர்த் தன் அளவு கடந்து அழிந்துவிடும்.

குறள்:284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
குறள் விளக்கம்:

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

குறள்:285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
குறள் விளக்கம்:

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

குறள்:286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
குறள் விளக்கம்:

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

குறள்:287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
குறள் விளக்கம்:

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவு எனும் மயங்கிய ஆறிவு இராது.

குறள்:288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
குறள் விளக்கம்:

அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் அறம் நிலைபெற்றிருப்பதுப் போல், களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலைபெற்றிருக்கும்.

குறள்:289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
குறள் விளக்கம்:

களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

குறள்:290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
குறள் விளக்கம்:

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு வானுலகம் வாய்க்கத் தவறாது.