காதற் சிறப்புரைத்தல் - காதல் சிறப்பு உரைத்தல்
குறள் வரிசை
குறள்:1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
குறள் விளக்கம்:

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

குறள்:1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
குறள் விளக்கம்:

இப்பெண்ணோடு எம்மிடத்து உண்டான உறவு, உடம்போடு உயிருக்கு எத்தகைய தொடர்பு உண்டோ, அத்தகையது.

குறள்:1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
குறள் விளக்கம்:

என் கண்ணின் கருமணியின் கண் தங்கும் பாவையே! நீ அங்கிருந்து போய்விடுவாயாக! எம்மால் விரும்பப்படும் அழகிய நெற்றியை உடையவளுக்கு இருக்க இடம் போதாது.

குறள்:1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.
குறள் விளக்கம்:

ஆராய்ந்தெடுத்த அணிகளை அணிந்த இவள் சேரும்போது, உயிர் உடம்போடு சேர்ந்து வாழ்தல் போன்று இன்பமும் பிரியும் போது, அவ்வுயிருக்குச் சாதல் எப்படியோ அப்படித் துன்பமும் உண்டாகின்றன.

குறள்:1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
குறள் விளக்கம்:

ஒளியுடையனவாய்ப் போர் செய்கின்ற கண்கள் பொருந்திய இவளுடைய குணங்களை நான் மறந்தால் உடனே நினைக்க முடியும். ஆனால் ஒருபோதும் மறந்ததில்லையே!

குறள்:1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.
குறள் விளக்கம்:

என் காதலர் எனது கண்களை விட்டு எப்பொழுதும் வெளியே செல்லார்; அவர் அங்கு இருப்பதை மறந்து இமை கொட்டினேனாயினும் அவர் வருந்த மாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.

குறள்:1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
குறள் விளக்கம்:

என் காதலர் எனது கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டேன்.

குறள்:1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.
குறள் விளக்கம்:

என் காதலர் நெஞ்சுள்ளே இருக்கின்றாராதலால், சூடான உணவை உண்பதற்கு அஞ்சுவேன்; அந்தச் சூடு அவரைச் சுடும் என்று அறிந்து உண்பதில்லை.

குறள்:1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.
குறள் விளக்கம்:

என் கண் இமைக்குமாயின் உள்ளே இருக்கும் காதலர் மறைவர் என்று எண்ணிக் கண்மூடாதிருப்பேன்; அதனைக் கண்ட ஊரார் என் காதலர் அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

குறள்:1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
குறள் விளக்கம்:

என் காதலர் என் உள்ளத்திலே எப்பொழுதும் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.