குடிமை
குறள் வரிசை
குறள்:951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
குறள் விளக்கம்:

சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

குறள்:952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
குறள் விளக்கம்:

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

குறள்:953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.
குறள் விளக்கம்:

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாகும்.

குறள்:954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
குறள் விளக்கம்:

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

குறள்:955
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
குறள் விளக்கம்:

தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

குறள்:956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
குறள் விளக்கம்:

குற்றமற்ற தம் குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

குறள்:957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
குறள் விளக்கம்:

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

குறள்:958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
குறள் விளக்கம்:

மிகப்பண்புடைய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பண்பிழந்து நடந்து கொள்வானேயானால், அவன் குடும்பம் உண்மையில் உயர்ந்த பண்புகளின் விளைநிலமா என்று ஐயமாகும்.

குறள்:959
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
குறள் விளக்கம்:

நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

குறள்:960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
குறள் விளக்கம்:

ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.