குறிப்பறிதல் - குறிப்பு அறிதல்
குறள் வரிசை
குறள்:701
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.
குறள் விளக்கம்:

ஒருவர் ஒன்றும் கூறாமல் இருக்கும்போது, அவர் முகத்தைப் பார்த்து என்ன நினைக்கிறார் என்பதை அறிய வல்லவன், எக்காலத்தும் வற்றாத கடல் சூழ்ந்த உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

குறள்:702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
குறள் விளக்கம்:

ஒருவர் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவரை, அடுத்தவர் மனக்கருத்தை புரிந்து உதவிகள் செய்து வாழ்ந்த நல்ல முன்னோர்களுக்கு சமமாக ஒப்பிடலாம்.

குறள்:703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
குறள் விளக்கம்:

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.

குறள்:704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
குறள் விளக்கம்:

ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.

குறள்:705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
குறள் விளக்கம்:

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணரமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்கள் இருந்தும் என்ன பயன்?.

குறள்:706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
குறள் விளக்கம்:

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல, ஒருவன் மனத்தில் இருப்பதை அவன் முகம் காட்டும்.

குறள்:707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
குறள் விளக்கம்:

ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்பு அடைந்தாலும் முகம் அதனை அறிந்து மலர்ந்தும் சுருங்கியும் காட்டும்; ஆகையால், அந்த முகம்போல அறிவு மிக்கது வேறு உண்டோ?.

குறள்:708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
குறள் விளக்கம்:

மனத்தில் நிகழ்வதைக் குறிப்பால் உணர்ந்து, நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பாரைப் பெற்றால், அவர் முகத்தைப் பார்த்து நின்றலே துன்பத்தை ஒழிப்பதற்குப் போதுமானது.

குறள்:709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
குறள் விளக்கம்:

கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

குறள்:710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
குறள் விளக்கம்:

யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.