சான்றாண்மை
குறள் வரிசை
குறள்:981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
குறள் விளக்கம்:

தமது கடமை இதுவென்று அறிந்து, நற்குணங்களை மேற்கொண்டொழுகுபவர்க்கு நல்லவை என்ற குணங்கள் எல்லாம் இயல்பாய் இருக்கும் என்று சொல்வர் அறிந்தோர்.

குறள்:982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
குறள் விளக்கம்:

சான்றோரது சிறப்பாவது குணங்களாலாகிய நலமே, அவையல்லாத உறுப்புகளாலாகிய நலம் எவ்வகை அழகிலும் சேர்ந்ததன்று.

குறள்:983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்
குறள் விளக்கம்:

அன்புடைமை, நாணம், உதவி செய்தல், கண்ணோட்டம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்களாகும்.

குறள்:984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
குறள் விளக்கம்:

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

குறள்:985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
குறள் விளக்கம்:

ஒரு செயலை முடிப்பவரது வலிமையாவது, பணிவுடன் நடத்தல்; அஃது அறிவுடையோர் பகைவரை நண்பராக்கும் கருவியுமாகும்.

குறள்:986
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
குறள் விளக்கம்:

சால்பாகிய பொன்னின் அளவு அறிவதற்கு உரை கல்லாகிய செயல் எதுவென்றால், அது, தம்மை விடத் தாழ்ந்தவரிடத்தும் தமக்கு தோல்வி வந்தால் அதனை ஒப்புக் கொள்ளுதலாகும்.

குறள்:987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
குறள் விளக்கம்:

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்?

குறள்:988
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
குறள் விளக்கம்:

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

குறள்:989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
குறள் விளக்கம்:

நற்குணம் என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தில் உலகமே நிலைமாறினாலும் தாம் தம் அறநெறியிலிருந்து விலகமாட்டார்.

குறள்:990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
குறள் விளக்கம்:

குணநிறைவுடையவர் தங்கள் தன்மையில் குறைவுபடுவாராயின், இப்பெரிய பூமியும் தன் பாரத்தைப் பொறுக்க மாட்டாது.