செங்கோன்மை ஆட்சி தர்மம்
குறள் வரிசை
குறள்:541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
குறள் விளக்கம்:

ஒருவர் செய்தக் குற்றங்களை ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல், நடுவுநிலையோடு ஆராய்ந்து, குற்றத்திற்குத் தக்க தண்டனையை அறிந்து செய்வதே நீதியாகும்.

குறள்:542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
குறள் விளக்கம்:

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய நேர்மையான ஆட்சியை நோக்கி வாழ்கின்றனர்.

குறள்:543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
குறள் விளக்கம்:

அறவோர் போற்றும் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது அரசனுடைய நேர்மையான ஆட்சியே.

குறள்:544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குறள் விளக்கம்:

குடிமக்களை அரவணைத்து நேர்மையான ஆட்சியை நடத்தும் அரசனுடைய அடிகளை அடைக்கலமாக அடைந்து இவ்வுலகத்து உயிர்கள் யாவும் வாழும்.

குறள்:545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
குறள் விளக்கம்:

நீதி முறைப்படி நேர்மையாக ஆளும் அரசனுடைய நாட்டில், பருவ மழையும், குறையாத விளைபொருளும் ஒருங்கே உள்ளனவாகும்.

குறள்:546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.
குறள் விளக்கம்:

அரசனுக்கு வெற்றியைத் தருவது வேலன்று; அவனது நேர்மையான ஆட்சியே ஆகும், அதுவும் நீதியிலிருந்து மாறுபடாதிருக்குமாயின்.

குறள்:547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
குறள் விளக்கம்:

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செலுத்தினால், அஃது அவனை காப்பாற்றும்.

குறள்:548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
குறள் விளக்கம்:

நீதி வேண்டியோர் எளிதாகப் பார்த்துப் பேசத்தக்க நிலையில் உள்ளவனாகி, அவர் சொல்லியவற்றை ஆராய்ந்து நீதி செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

குறள்:549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
குறள் விளக்கம்:

குடிமக்களைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காத்து, குற்றம் செய்தவர்களை தக்க தண்டனையின் மூலம் ஒழித்தல் அரசனது தொழிலாகும், அஃது அவனுக்குப் பழியன்று.

குறள்:550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
குறள் விளக்கம்:

மன்னன் கொடியவர்களைக் மரண தண்டனை கொடுத்துத் தண்டித்தலானது, பயிர்களுக்கு இடையூறு செய்யும் புற்களைக் களைந்தெறிவது போன்றதாகும்.