சொல்வன்மை - பேச்சுத்திறன்
குறள் வரிசை
குறள்:641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
குறள் விளக்கம்:

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

குறள்:642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
குறள் விளக்கம்:

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

குறள்:643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
குறள் விளக்கம்:

கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்புமாறும் சொல்வதே சிறந்த சொல்வன்மை எனப்படும்.

குறள்:644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.
குறள் விளக்கம்:

தாம் சொல்லக் கருதியதைச் சொல்லின் திறத்தை அறிந்து சொல்லுதல் வேண்டும். அதனினும் மேம்பட்ட அறமும் பொருளும் இல்லை.

குறள்:645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
குறள் விளக்கம்:

தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லும் சொல்லாகிய வேறு சொல் இல்லாமையை அறிந்து, திறமையாகச் சொல்லுதல் வேண்டும்.

குறள்:646
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
குறள் விளக்கம்:

மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும், குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.

குறள்:647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
குறள் விளக்கம்:

தான் எண்ணியவற்றைப் பிறர் ஏற்குமாறு சொல்ல வல்லவனாகவும், சொல்ல வேண்டியவற்றை மறவாதவனாகவும், அவைக்கு அஞ்சாதவனாகவும் உள்ளவனைப் பகைவனாகக் கொண்டு வெல்லுதல் எவர்க்கும் அரிது.

குறள்:648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
குறள் விளக்கம்:

சொல்லவிருக்கும் செய்திகளை ஒழுங்குபடக் கோத்து இனிதாகக் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகத்தவர் அவர் கூறியவற்றை விரைந்து ஏற்று கொள்வர்.

குறள்:649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
குறள் விளக்கம்:

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

குறள்:650
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
குறள் விளக்கம்:

தாம் கற்றதைப் பிறர் அறியுமாறு விரித்துக் கூறத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணக்காத மலர் போன்றவராவர்.