தனிப்படர் மிகுதி - ஒருதலை ஏக்கம்
குறள் வரிசை
குறள்:1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
குறள் விளக்கம்:

எவரை விரும்புகின்றார்களோ விரும்பப்பட்ட அவரால் காதலிக்கப்படும் மகளிர் காம நுகர்ச்சி எனப்படும் விதையில்லாத கனியைப் பெற்றவரன்றோ?

குறள்:1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
குறள் விளக்கம்:

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

குறள்:1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
குறள் விளக்கம்:

தாம் விரும்பும் கணவரால் விரும்பப்படும் மகளிர்க்கு, நாம் இன்பமாக வாழ்கின்றோம் என்னும் செருக்கு ஏற்றதாகும்.

குறள்:1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
குறள் விளக்கம்:

பிறரால் மதிக்கப்பட்டாலும் பெண்கள், தம் கணவரால் விரும்பப் படாராயின் நல்வினைப்பயன் பொருந்தாதவராவர்.

குறள்:1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
குறள் விளக்கம்:

நம்மால் காதல் செய்யப்பட்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன இன்பத்தைச் செய்வார்?

குறள்:1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
குறள் விளக்கம்:

மகளிர், ஆடவர் என்னும் ஈரிடத்தும் ஒத்திருக்க வேண்டிய காதல், ஒரு பக்கத்து மட்டும் இருக்குமாயின், அது துன்பம் தருவதாகும். காவடித் தண்டின் பாரம் போல, இருபக்கமும் ஒத்திருப்பின் அஃது இனிமை உடையதாகும்.

குறள்:1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
குறள் விளக்கம்:

இன்பம் நுகர்வதற்குரிய காதலர் இருவரிடத்தும் நடுவாக நிற்றலை விட்டு, ஒருவர் பக்கத்தே மட்டும் நின்று தன் செயலைச் செய்யும் காமன், தான் செய்தலால் உண்டாகும் பசப்புத் துன்பத்தையும் பிரிவுத் துயரையும் அறிய மாட்டானோ?.

குறள்:1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
குறள் விளக்கம்:

காதலரிடத்திலிருந்து ஒர் இனிய சொல்லாவது கேட்கப்பெறாமல் பிரிவைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்ற பெண்களைப் போல் வலிய நெஞ்சமுடையவர் உலகத்தில் இல்லை.

குறள்:1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
குறள் விளக்கம்:

விரும்பப்பட்டவர் அருள் செய்யாராயினும், அவரிடமிருந்து பிறக்கும் எச்சொற்களும் என் காதுக்கு இனியனவாகும்.

குறள்:1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
குறள் விளக்கம்:

உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் மிக்க நோயை உரைக்க விரும்புகின்ற நெஞ்சே! அஃது அரிய செயலாகும். உனக்குத் துன்பம் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக! அஃது எளிது.