தீவினையச்சம் - பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல்
குறள் வரிசை
குறள்:201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
குறள் விளக்கம்:

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

குறள்:202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
குறள் விளக்கம்:

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

குறள்:203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
குறள் விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

குறள்:204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
குறள் விளக்கம்:

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

குறள்:205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
குறள் விளக்கம்:

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மேலும் வறியவன் ஆகி வருந்துவான்.

குறள்:206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
குறள் விளக்கம்:

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

குறள்:207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
குறள் விளக்கம்:

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

குறள்:208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
குறள் விளக்கம்:

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல் தொடர்ந்து தங்கியிருக்கும்.

குறள்:209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
குறள் விளக்கம்:

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

குறள்:210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
குறள் விளக்கம்:

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.