தெரிந்து தெளிதல்
குறள் வரிசை
குறள்:501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
குறள் விளக்கம்:

அறம், பொருள் ஆசை, காம இச்சை, தன் உயிருக்காக அஞ்சும் அச்சம் என்னும் நான்கினாலும் ஒருவனது மனநிலையை நன்கு சோதித்து, அவனிடத்தில் அரசன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

குறள்:502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
குறள் விளக்கம்:

நல்லகுடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து நீங்கித் தனக்குப் பழி என்று அஞ்சி நிற்கும் நாணமுடையவனிடத்தில் அரசனது நம்பிக்கை இருக்க வேண்டும்.

குறள்:503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
குறள் விளக்கம்:

அரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்று விளங்குபவரிடத்தும், ஆராய்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

குறள்:504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
குறள் விளக்கம்:

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

குறள்:505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
குறள் விளக்கம்:

உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

குறள்:506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
குறள் விளக்கம்:

சுற்றத்தாறின் தெடர்பு இல்லாதவரை நம்பித் தெளியக்கூடாது, ஏனென்றால் அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

குறள்:507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.
குறள் விளக்கம்:

அறிவில்லாதவனை அவனிடத்துள்ள அன்பு காரணமாகத் தேர்ந்தெடுத்தது பதவியில் அமர்த்துவது, அரசனுக்கு அறியாமை பலவற்றையும் தரும்.

குறள்:508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
குறள் விளக்கம்:

அயலான் ஒருவனைச் சிறிதும் ஆராயாமல் அவன் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவனால் அவன் துன்பப்படுவதல்லாமல் அவன் சந்ததியினரும் துன்பத்தை அனுபவிக்க நேரும்.

குறள்:509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
குறள் விளக்கம்:

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

குறள்:510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
குறள் விளக்கம்:

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.