நட்பாராய்தல் - நட்புக்கு யார் உரியவர்
குறள் வரிசை
குறள்:791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
குறள் விளக்கம்:

நட்பினை விரும்பி மேற்கொள்பவர்க்கு, ஒருவருடன் நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விட்டுப் பிரிதல் இயலாது. அதனால் ஆராயாமல் நட்புச் செய்தல்போல ஒருவனுக்குச் கேடு தருவது வேறில்லை.

குறள்:792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.
குறள் விளக்கம்:

பலவகையில் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுக்கு, அதனால் இறுதியில் தான் சாகற்கேதுவாகிய துன்பம் உண்டாகும்.

குறள்:793
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
குறள் விளக்கம்:

ஒருவனது குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், அவனது சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும்.

குறள்:794
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
குறள் விளக்கம்:

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

குறள்:795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
குறள் விளக்கம்:

குற்றமுள்ளதைச் செய்ய எண்ணினால் வருந்தும்படியாகச் சொல்லிக் கண்டிக்கும், உலக வழக்கை அறிந்து நடக்கும்படி செய்விக்கும் வல்லமையுடையவரைத் தேடி நட்புக் கொள்ளுதல் வேண்டும்.

குறள்:796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
குறள் விளக்கம்:

கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அந்தக் கேடு நண்பர்களை நன்றாக அளந்து அறியும் ஓர் அளவு கோலாகும்.

குறள்:797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
குறள் விளக்கம்:

ஒருவனுக்கு இலாபம் என்று செல்லப்படுவது, அறிவில்லாதவரின் நட்பைவிட்டு நீங்குதலேயாகும்.

குறள்:798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
குறள் விளக்கம்:

தன் ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய நினைக்கக் கூடாது, அதுபோலத் தனக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளக் கூடாது.

குறள்:799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
குறள் விளக்கம்:

துன்பக் காலத்தில் கைவிடுவார் நட்பினை, இறக்குங் காலத்தில் ஒருவன் நினைப்பானாயினும், அந்த இறப்பைவிட அந்ந நினைவு தான் மனத்தைச் சுடும்.

குறள்:800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
குறள் விளக்கம்:

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.