நலம் புனைந்துரைத்தல் - தலைவன் வர்ணனை!
குறள் வரிசை
குறள்:1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
குறள் விளக்கம்:

அனிச்சம்பூவே, வாழ்வாயாக! நல்ல குணமுடையவளாகிய எம்மால் விரும்பப்படுகின்றவள், உன்னைவிட மென்மையான தன்மையுடையவள்.

குறள்:1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
குறள் விளக்கம்:

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து, மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

குறள்:1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
குறள் விளக்கம்:

மூங்கில் போன்ற தோளினையுடைய தலைவிக்கு உடம்பு தளிர் நிறம்; பற்கள் முத்துப் போன்றவை; மணம் இயற்கையாய் அமைந்த மணம்; மை எழுதிய கண்கள் வேல் போன்றவை.

குறள்:1114
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
குறள் விளக்கம்:

குவளை மலர்கள், காணும் தன்மையுடையவானால், சிறந்த அணிகளையுடைய தலைவியின் கண்களுக்கு யாம் ஒப்பாகமாட்டோம் என்று எண்ணி, அவ்வெட்கத்தினால் கவிழ்ந்து நிலத்தினை நோக்கும்.

குறள்:1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
குறள் விளக்கம்:

இவள் தன்னுடைய மென்மைத் தன்மையை நினையாமல், அனிச்சம்பூவைக் காம்பு நீக்காமல் சூடினாள்; அதன் சுமையைத் தாங்காது இவளது இடை ஒடிந்து போகும். எனவே, அதற்கு இனிச் சாப்பறையேயன்றி நல்ல பறை ஒலிக்கமாட்டா.

குறள்:1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.
குறள் விளக்கம்:

விண்மீன்கள் சந்திரனுக்கும் இவளது முகத்துக்கும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

குறள்:1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
குறள் விளக்கம்:

முன்பு குறைந்த கலையுடன் வந்து நிறைந்து விளங்கும் சந்திரனைப்போல, இப்பெண் முகத்தில் களங்கம் உளதோ? இல்லை.

குறள்:1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
குறள் விளக்கம்:

சந்திரனே, வாழ்வாயாக! இப்பெண்ணின் முகம்போல ஒளிவிடக் கூடுமாயின், நீயும் என் விருப்பத்தை யுடையை ஆவாய்.

குறள்:1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
குறள் விளக்கம்:

நிலவே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

குறள்:1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
குறள் விளக்கம்:

மெல்லிய தன்மையுள்ள அனிச்சப்பூவும், அன்னப் பறவையின் சிறகும் ஆகிய இரண்டும், இவ்வழகிய பெண்ணின் பாதங்களுக்கு நெருஞ்சிப் பழத்தின் முள்போலத் துன்பத்தைச் செய்யும்.