நல்குரவு - வறுமையின் கொடுமை
குறள் வரிசை
குறள்:1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
குறள் விளக்கம்:

வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால், வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை.

குறள்:1042
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
குறள் விளக்கம்:

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனை பற்றிக் கொண்டால் அவனுக்கு நிகழ்கால இன்பமும், வருங்கால இன்பமும் இல்லாதபடி செய்யும்.

குறள்:1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
குறள் விளக்கம்:

வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், பழமையாக வரும் குடிப்பெருமையையும், அதனால் வருகின்ற நல்ல புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.

குறள்:1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
குறள் விளக்கம்:

வறுமையானது நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட இழிவான சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும்.

குறள்:1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
குறள் விளக்கம்:

வறுமை என்று சொல்லப்படும் துன்பத்துள். பலவகைப்பட்ட துன்பங்களும் வந்துசேரும்.

குறள்:1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
குறள் விளக்கம்:

நல்ல நூல்களின் பொருளை வறியவர் தெளிவாக அறிந்து கூறினாலும், அவர் சொல் பயனற்ற சொல்லாக முடியும்.

குறள்:1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
குறள் விளக்கம்:

அறநெறியிலிருந்து விலகி வந்த வறுமை ஒருவனைச் சேர்ந்தால், பெற்ற தாயினாலும் அயலான்போலக் கருதச் செய்துவிடும்.

குறள்:1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
குறள் விளக்கம்:

நேற்றும் என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைச் செய்த வறுமை, இன்றும் என்னிடம் வந்து துன்புறுத்துமோ?

குறள்:1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
குறள் விளக்கம்:

ஒருவன் நெருப்பிலே இருந்து உறங்குதல் கூடும்; ஆனால் வறுமை வந்தபோது எவ்வகையாலும் கண்மூடி உறங்குதல் அரிது.