நாணுத் துறவுரைத்தல்
குறள் வரிசை
குறள்:1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
குறள் விளக்கம்:

காமத்தால் துன்புற்று வருந்தும் ஆடவர்களுக்குப் பாதுகாப்பு, மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

குறள்:1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
குறள் விளக்கம்:

காதல் வருத்தத்தைத் தாங்கமாட்டாத உடம்பும், உயிரும் நாணத்தைத் தூர நிறுத்திவிட்டு மடலூரத் துணிந்தன.

குறள்:1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
குறள் விளக்கம்:

வெட்கத்தோடு நல்ல வீரமும் முன்னமே உடையேன். அவை காதல் காரணமாக நீங்குதலால், இப்பொழுது நான் காமம் மிகுந்தார் ஏறும் மடல்குதிரையினை உடையவனாய் இருக்கின்றேன்.

குறள்:1134
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
குறள் விளக்கம்:

நாணமும் நல்ல வீரமுமாகிய தோணிகளை, காமமாகிய வலிய வெள்ளம் என்னிடமிருந்து பிரித்து அடித்துக் கொண்டு செல்கின்றது.

குறள்:1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
குறள் விளக்கம்:

மாலைப் பொழுதில் அனுபவிக்கும் துன்பத்தையும், அதற்கு மருந்தாகிய மடல் குதிரையினையும் மாலைபோலத் தொடர்ந்த சிறு வளையல்கள் அணிந்தவள் எனக்கு தந்தாள்.

குறள்:1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
குறள் விளக்கம்:

இப்பெண் காரணமாக என் கண்கள் தூங்கவில்லை, பாதி இரவிலும் மடலூர்தலை நினைத்துக் கொண்டிருப்பேன்.

குறள்:1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.
குறள் விளக்கம்:

கடல்போல எல்லையற்ற காமநோயினை அனுபவித்தாலும், மடல் ஏறுதலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண்பிறவிபோல, மிக்க பெருமையுடைய பிறப்பு உலகத்து இல்லை.

குறள்:1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
குறள் விளக்கம்:

இவர் நிறையில் மிகுந்தவர்; மிகவும் இரங்கத் தக்கவர் என்று கருதாது, காமநோய் மறைத்தாலும் மறையாமல் வெளிப்படும்.

குறள்:1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
குறள் விளக்கம்:

யான் முன்னெல்லாம் அடக்கத்தோடு இருந்தேன். அதனால் யாரும் என்னை அறிந்திலர். இனி, அவ்வாறு இன்றி யானே எல்லார்க்கும் அறிவிப்பேன் என எண்ணி, என் காமம் இவ்வூர் வீதியெல்லாம் மயங்கிச் சுழல்கின்றது.

குறள்:1140
யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
குறள் விளக்கம்:

யாம் கேட்டல் மாத்திரம் அன்றிக் கண்ணினால் காணுமாறு எம்மைப் பார்த்து அறிவில்லாதவர் சிரிக்கின்றனர். அதற்குக் காரணம் யாம் அடைந்த துன்பங்களை அவர்கள் அடையாமையாலாகும்.