பகைமாட்சி - பகையின் தன்மை
குறள் வரிசை
குறள்:861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
குறள் விளக்கம்:

தம்மைவிட வலியாரிடத்தில் பகையாக எதிர்த்து நிற்றலை விடுதல் வேண்டும்; தம்மைவிட மெலியவர் மீது பகைகொண்டு போர் செய்தலை விரும்புதல் வேண்டும்.

குறள்:862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
குறள் விளக்கம்:

இனத்தார்மேல் அன்பில்லாதவனாகவும், வலிமையான துணை இல்லாதவனாகவும், தானும் வலிமை இல்லாதவனாகவும் உள்ள ஒருவன் எவ்வாறு பகைவரை வெல்வான்?

குறள்:863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
குறள் விளக்கம்:

ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிய வேண்டியவற்றை அறியாதவனாய், பிறரோடு இணங்கிப் போகும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்றும் ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.

குறள்:864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
குறள் விளக்கம்:

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

குறள்:865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
குறள் விளக்கம்:

ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லத்தக்கவனாவான்.

குறள்:866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
குறள் விளக்கம்:

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய், மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடையவனானால் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

குறள்:867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
குறள் விளக்கம்:

தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

குறள்:868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
குறள் விளக்கம்:

ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

குறள்:869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
குறள் விளக்கம்:

நீதி அறியாது அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவரை எதிர்த்துப் பகைகொள்ளுவோர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காது நிற்கும்.

குறள்:870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.
குறள் விளக்கம்:

அறிவில்லாதவனை எதிர்த்துப் போர் செய்யும் சிறு முயற்சியால் பொருளைப் பெறாதவனை, எக்காலத்தும் புகழ் அடையாது.