பசப்புறு பருவரல் - காதல் நோய்
குறள் வரிசை
குறள்:1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
குறள் விளக்கம்:

காதலர் பிரிந்து செல்வதற்கு நான் உடன்பட்டேன். அவர் பிரிந்த வருத்தத்தினால் என் உடல் நிறம் மாறியதை யாரிடம் சொல்லுவேன்?

குறள்:1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
குறள் விளக்கம்:

இப்பசலை நிறமானது, காதலர் தந்தார் என்னும் களிப்பு மிகுதியால் என் உடம்பு முழுவதும் ஏறிப்பரவுகின்றது.

குறள்:1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
குறள் விளக்கம்:

அவர் இக்காதல் நோயையும், பசலையையும் எனக்குத் தந்து, கைம்மாறாக என் அழகையும் நாணையும் பெற்றுக் கொண்டார்.

குறள்:1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
குறள் விளக்கம்:

நான் காதலரை மனதில் நினைக்கின்றேன்; நான் பேசுவதும் அவரது நற்குணங்களையே; அவ்வாறு இருந்தும் இப்பசலை நிறம் வஞ்சனையாக என் உடம்பில் பரவுகின்றது.

குறள்:1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
குறள் விளக்கம்:

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

குறள்:1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
குறள் விளக்கம்:

விளக்கின் ஒளிகுறையும் சமயத்தைப் பார்த்து இருள் வருவது போல் காதலரின் சேர்க்கை முடியும் சமயம் பார்த்துப் பசலை நிறம் நெருங்கிவரும்.

குறள்:1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
குறள் விளக்கம்:

முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

குறள்:1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
குறள் விளக்கம்:

இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்று பழி சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

குறள்:1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
குறள் விளக்கம்:

பிரிவுக்கு யான் உடன்படும் படியாகச் செய்தவர் நல்ல நிலையினராவராயின், என் உடம்பில் முன் படர்ந்தது போலப் பசலை படர்வதாக.

குறள்:1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
குறள் விளக்கம்:

முன்பு மகிழ்வித்துக் சேர்ந்தவர் இன்று அருளாமல் இருப்பதை ஊரார் தூற்றமாட்டாராயின், ‘நான் பசலை அடைந்தேன்’ என்று பெயர் பெறுதல் நல்லதே.