படர்மெலிந் திரங்கல் - பிரிவுத் துயரம்
குறள் வரிசை
குறள்:1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
குறள் விளக்கம்:

பிரிவால் வரும் நோயைப் பிறர் அறிவதற்கு நாணி யான் என்னுள் மறைப்பேன்; மறைத்தாலும், என் நோய், அந்நாண் எல்லையில் அடங்கி நில்லாமல், நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் சுரப்பதுபோல மேலும் மிகுகின்றது.

குறள்:1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
குறள் விளக்கம்:

இந்த நோயை இங்குள்ளார் யாரும் அறியாமல் மறைத்தலையும் செய்ய இயலாதவளாயினேன். நோயைச் செய்த காதலர்க்கு உரைக்கலாமோ எனின், அதுவும் எனக்கு வெட்கத்தைத் தருகின்றது. இனி, என் செய்வேன்?

குறள்:1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பி னகத்து.
குறள் விளக்கம்:

துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

குறள்:1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
குறள் விளக்கம்:

காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான படகுதான் இல்லை.

குறள்:1165
துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
குறள் விளக்கம்:

நட்பாயிருக்கும்போதே துன்பம் வரச் செய்பவர், பகையானால் என்ன செய்வாரோ?

குறள்:1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
குறள் விளக்கம்:

காதலால் வரும் இன்பம் கடல் போன்று பெரியது; அது வருத்தம் செய்யும்போது அத்துன்பம் கடலைவிடப் பெரியது.

குறள்:1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
குறள் விளக்கம்:

காதலாகிய பெரிய கடலை நீந்தி அதன் கரையை யான் காணவில்லை; பாதி இரவிலும் யாதொரு துணையுமின்றி யான் தனிமையாக உள்ளேன்.

குறள்:1168
மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
குறள் விளக்கம்:

இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் அருள் செய்து உறக்கத்தைக் கொடுக்கின்ற இரவுக்கு என்னைத் தவிர வேறு துணையில்லை.

குறள்:1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
குறள் விளக்கம்:

பிரிவைத் தாங்கமுடியாத நாளிலே நீண்டதாகச் செல்கின்ற இரவு, அக்கொடியவர் செய்யும் கொடுமையைவிடப் பெருங்கொடுமையைச் செய்கின்றது.

குறள்:1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
குறள் விளக்கம்:

எனது மனத்தைப் போலக் கண்கள் என் காதலர் இருக்கும் இடத்துக்கு விரைவில் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கமாட்டா.