படைமாட்சி - படைச் சிறப்பு
குறள் வரிசை
குறள்:761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாம் தலை.
குறள் விளக்கம்:

எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

குறள்:762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
குறள் விளக்கம்:

போரிலே அழிவு வந்தபோது வலிமை குறைந்தாலும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

குறள்:763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
குறள் விளக்கம்:

எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீமை உண்டாகும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

குறள்:764
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
குறள் விளக்கம்:

போரில் வென்று அழிக்க முடியாததாய், பகைவரால் அடிமைப்படுத்த முடியாததாகித் தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

குறள்:765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
குறள் விளக்கம்:

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

குறள்:766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
குறள் விளக்கம்:

வீரம், மானம், முன் வீரர்கள் சென்ற வழியில் செல்லுதல், தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.

குறள்:767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
குறள் விளக்கம்:

தன்மீது வந்த பகைப்படையைத் தடுக்கும் முறையை அறிந்து, அப்பகைவரது முன்னணிப்படையைத் தன்மீது வராமல் தடுத்து, தான் அதன்மீது செல்லவல்லதே படையாகும்.

குறள்:768
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
குறள் விளக்கம்:

பகைவரை கொல்லும் திறமையும், தடுக்கும் வல்லமையும், படைக்கு இல்லையாயினும் அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.

குறள்:769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
குறள் விளக்கம்:

படை தன் அளவில் சுருங்குதலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லையாயின், அது பகைவரை வெல்லும்.

குறள்:770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
குறள் விளக்கம்:

சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், தனக்கு தலைவர் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.