பழைமை
குறள் வரிசை
குறள்:801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
குறள் விளக்கம்:

பழைம‍ை என்று சொல்லப்படுவது எதுவென்றால், அது நெடுங்கால நண்பர் நம்மீது உரிமையோடு செய்யும் செயல்களை பழிக்காமல் அவற்றிக்கு உடன்படுவதாகிய நட்பாகும்.

குறள்:802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
குறள் விளக்கம்:

நட்பிற்கு உறுப்பாவது, நண்பர் உரிமையால் செய்யும் செயலாகும்; அதை மகிழ்வோடு ஏற்பது சான்றோரின் கடமையாகும்.

குறள்:803
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
குறள் விளக்கம்:

நண்பர் நட்பின் உரிமையால் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

குறள்:804
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
குறள் விளக்கம்:

நண்பர் உரிமையால் ஒன்றை கேளாமல் செய்தாலும், அவ்வுரிமையை விரும்பும் காரணத்தால் அவர் செய்யும் செயலையும் விரும்பியிருப்பர்.

குறள்:805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
குறள் விளக்கம்:

நண்பர் வருந்தத்தக்க செயல்களைச் செய்வாரானால், அதற்குக் காரணம் அவருடைய அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்று உணரவேண்டும்.

குறள்:806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
குறள் விளக்கம்:

நட்பின் எல்லையை மீறாது நிற்பவர், தம்மோடு பழைமையாக வந்த நண்பரது நட்பை, அவரால் கேடு வந்தபோதும் விடமாட்டார்.

குறள்:807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
குறள் விளக்கம்:

தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

குறள்:808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
குறள் விளக்கம்:

தமது நண்பர் செய்த பிழையைப் பிறர் சொன்னாலும் கேளாது பழைமை பாராட்டுவோருக்கு, அவர் பிழை செய்வாராயின் அந்நாள் நல்ல நாளாகும்.

குறள்:809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
குறள் விளக்கம்:

உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் போற்றும்.

குறள்:810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
குறள் விளக்கம்:

பழைய நண்பர் பிழை செய்தாராயினும், அவரிடத்து அன்பு குறையாதவரைப் பகைவரும் விரும்புவர்.