பிறனில் விழையாமை - பிறனுடைய மனைவியை விரும்பாமை
குறள் வரிசை
குறள்:141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
குறள் விளக்கம்:

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

குறள்:142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
குறள் விளக்கம்:

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

குறள்:143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
குறள் விளக்கம்:

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடம் விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

குறள்:144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
குறள் விளக்கம்:

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.

குறள்:145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
குறள் விளக்கம்:

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

குறள்:146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
குறள் விளக்கம்:

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறித் தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்குவதில்லை.

குறள்:147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
குறள் விளக்கம்:

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

குறள்:148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
குறள் விளக்கம்:

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; உயர்ந்த ஒழுக்கமுமாகும்.

குறள்:149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
குறள் விளக்கம்:

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்குரியவர் யாரென்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

குறள்:150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
குறள் விளக்கம்:

ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.