புணர்ச்சி மகிழ்தல் - காதல் + கூடல் = இன்பம்
குறள் வரிசை
குறள்:1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.
குறள் விளக்கம்:

கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும், நாவினால் உண்டும், மூக்கால் மோந்தும், உடம்பால் தீண்டியும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

குறள்:1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
குறள் விளக்கம்:

நோயுற்றால் அந்நோயை நீக்கப் பயன்படுவது பிறிதொரு பொருளாகும். சிறந்த அணிகளையுடைய இத்தலைவியால் வந்த என் நோய்க்கு இவளே மருந்தாகிறாள்.

குறள்:1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
குறள் விளக்கம்:

தம்மால் விரும்பப்படும் மகளிரது மெல்லிய தோளில் சாய்ந்து துயிலும் துயில் இன்பம் போலத் தாமரைக் கண்ணனாகிய கடவுளுன் உலகம் (சுவர்க்கம்) இன்பம் தருவதாகுமோ?

குறள்:1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
குறள் விளக்கம்:

இத்தலைவியை நீங்கிய வழி சுடுகின்றது. இவளை அணுகிய வழி குளிர்கின்றது. இத்தன்மையதாகிய தீயை என் உள்ளத்தில் தருவதற்கு, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.

குறள்:1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
குறள் விளக்கம்:

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

குறள்:1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
குறள் விளக்கம்:

இப்பெண்ணின் தோள்களை நான் தீண்டுந்தோறும் என் உயிர் தளிர்ப்பதால், இவளுடைய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.

குறள்:1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
குறள் விளக்கம்:

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

குறள்:1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
குறள் விளக்கம்:

காற்றும் இடையே சென்று பிரிக்க முடியாதபடி இறுக்கமாகத் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்புகின்ற இருவருக்கும் இனிதாகும்.

குறள்:1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
குறள் விளக்கம்:

கூடலுக்கு வேண்டுவதாகிய சிறு பிணக்கும் அதனை மிகவிடாது நீங்குதலும், அதன்பின் உண்டாவதாகிய புணர்ச்சியும் என்னும் இவை, அன்பினால் கூடினார் பெற்ற பயனாகும்.

குறள்:1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
குறள் விளக்கம்:

சிவந்த நகை அணிந்தாளைப் புணரப் புணர இவளிடத்துக் காதலானது, நூலறிவாலும் மதிநுட்பத்தாலும் பொருள்களை அறிய அறிய முன்னைய அறியாமையே காணப்படுமாறு போலக் காணப்படுகின்றது.