புல்லறிவாண்மை - அறிவிலான்
குறள் வரிசை
குறள்:841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு.
குறள் விளக்கம்:

ஒருவனுக்கு வறுமையுள் மிக்க வறுமையாவது அறிவில்லாமை. பிற பொருள் இல்லாமையை வறுமையாகக் கருதார் உலகத்தார்.

குறள்:842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
குறள் விளக்கம்:

அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

குறள்:843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
குறள் விளக்கம்:

அறிவில்லாதவன் தாமே தமக்குச் செய்து கொள்ளும் தீமையைப் பகைவராலும்கூட அவருக்குச் செய்ய முடியாது.

குறள்:844
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
குறள் விளக்கம்:

அறிவின்மை என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

குறள்:845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
குறள் விளக்கம்:

அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்ற நூலுண்டாயின், அதனிடத்தும் பிறர்க்கு ஐயத்தை உண்டாக்கும்.

குறள்:846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
குறள் விளக்கம்:

தம்மிடத்துள்ள குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல், உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்துக் கொள்ளுதல் அற்ப அறிவாகும்.

குறள்:847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
குறள் விளக்கம்:

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.

குறள்:848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
குறள் விளக்கம்:

அற்ப அறிவுடையவன் நன்மையானவற்றை அறிவுடையோர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறிய வேண்டியவற்றை அறிய மாட்டான்; உயிர் உடலைவிட்டு நீங்கும் வரையில் நிலத்துக்கு ஒரு நோயாவான்.

குறள்:849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
குறள் விளக்கம்:

அறிவில்லாதவனை அறிவுடையவனாக்க முயல்வோன், தானே அறிவில்லாதவனாவான்; அவ்வறிவில்லாதவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.

குறள்:850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
குறள் விளக்கம்:

உலகத்தவர் உண்டு என்று அறிந்து சொன்னவற்றை இல்லை என்று சொல்பவன், உலகத்தில் ஒரு பேயாகக் கருதப்படுவான்.