பெண்வழிச் சேறல் - மனைவி சொல் மந்திரமா ?
குறள் வரிசை
குறள்:901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
குறள் விளக்கம்:

இன்பத்தின் பொருட்டுத் தம் மனையாளை விரும்பி அவள் சொற்படி நடப்பவர் உயர்ந்த அறப்பயனை அடையமாட்டார், யாதாயினும் ஒரு வினையைச் செய்து முடிக்க விரும்புவார். அதற்கு இடையூறு என்று கருதும் பொருளும் அவ்வின்பமே.

குறள்:902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
குறள் விளக்கம்:

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

குறள்:903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
குறள் விளக்கம்:

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

குறள்:904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த இன்று.
குறள் விளக்கம்:

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனுடைய முயற்சித் திறமையை அறிவுடையோர் பாராட்டுவதில்லை.

குறள்:905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
குறள் விளக்கம்:

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

குறள்:906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
குறள் விளக்கம்:

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

குறள்:907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
குறள் விளக்கம்:

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

குறள்:908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
குறள் விளக்கம்:

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார், நல்ல அறத்தையும் செய்ய மாட்டார்.

குறள்:909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
குறள் விளக்கம்:

அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

குறள்:910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
குறள் விளக்கம்:

சிந்திக்கும் ஆற்றலும், நெஞ்சுறுதியும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.