பெரியாரைத் துணைக்கோடல் - பெரியோர் நட்பு
குறள் வரிசை
குறள்:441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
குறள் விளக்கம்:

அறத்தின் நுண்மையை நன்கு அறிந்து உணர்ந்தவராய், தன்னினும் மூத்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையை எண்ணி ஆராய்ந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

குறள்:442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
குறள் விளக்கம்:

ஒருவனுக்கு வந்த துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்குபவராயும் மேலும் துன்பம் வராதபடி முன் அறிந்து காக்கும் தன்மையுடையவராயும் உள்ளவரைப் பேணித் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

குறள்:443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
குறள் விளக்கம்:

பெரியோரைப் போற்றி, அவரைத் தனக்கு உறவாகக் கொள்ளுதல், செய்வதற்கு அரியவற்றுள் எல்லாம் அரிய செயலாகும்.

குறள்:444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
குறள் விளக்கம்:

அறிவு முதலியவற்றால் தம்மை விடச் சிறந்தப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

குறள்:445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
குறள் விளக்கம்:

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

குறள்:446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
குறள் விளக்கம்:

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு. அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

குறள்:447
இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
குறள் விளக்கம்:

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்?.

குறள்:448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
குறள் விளக்கம்:

கடிந்து அறிவுரைக் கூறும் பொரியோரின் துணை இல்லாத மன்னன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

குறள்:449
முதலிலார்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை.
குறள் விளக்கம்:

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் பெரியோர் துணை இல்லாதவர்க்கு அதனால் வரும் நன்மை இல்லை.

குறள்:450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
குறள் விளக்கம்:

நல்லவராகிய பெரியோர் தொடர்பைக் கைவிடுவது, பலருடன் பகை கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமையுடையதாகும்.