பெரியாரைப் பிழையாமை - பெரியாரை மதிக்காவிடின்
குறள் வரிசை
குறள்:891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
குறள் விளக்கம்:

எடுத்த செயலை முடிக்கும் வல்லமையுடையவரின் வல்லமையை இகழாதிருத்தல், தம்மைக் காப்பவர் செய்து கொள்ளும் காவல்களுக்கெல்லாம் மேலானது.

குறள்:892
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
குறள் விளக்கம்:

ஆற்றல் மிக்க பெரியாரை மதியாமல் நடந்தால், அப்பெரியவரால் நீங்காத துன்பம் உண்டாகும்.

குறள்:893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
குறள் விளக்கம்:

ஒருவன், தான் கெட்டுப்போக வரும்பினால் பெரியாரைக் கேளாமலே ஒரு செயலைச் செய்க. தன்னைக் கொன்றுகொள்ள விரும்பினால் வலிமையுடையவருக்குக் குற்றம் செய்ய வேண்டும்.

குறள்:894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
குறள் விளக்கம்:

வலிமையுடையவர்க்கு வலிமையில்லாதவர் தீங்கு செய்தல், தானே வரும் மரணத்தை அது வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும்.

குறள்:895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
குறள் விளக்கம்:

மிக்க வலிமை உள்ள அரசனின் பகைக்கு உள்ளானவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

குறள்:896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
குறள் விளக்கம்:

தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

குறள்:897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
குறள் விளக்கம்:

தகுதி வாய்ந்த பெரியோர் கோபித்தால், எல்லா வகையாலும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும், பெறும் பொருளும் இருந்தும் என்ன பயன்?

குறள்:898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
குறள் விளக்கம்:

மலைபோன்ற பெருமையுடையவர், ஒருவனை அழிந்துபோக வேண்டும் என்று எண்ணினால், அவன் இவ்வுலகில் நிலை பெற்ற செல்வமுடையவனாயினும் தன் குடும்பத்தோடு அழிந்துவிடுவான்.

குறள்:899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
குறள் விளக்கம்:

உயர்ந்த கொள்கையுடையோர் சினந்தால், அரசனும் தனது இடைக்காலத்திலேயே அரசநிலை கெட்டு அழிந்துவிடுவான்.

குறள்:900
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
குறள் விளக்கம்:

மிகச் சிறந்த சீர்களை உடையப் பெரியோர் சினந்தால், மிகப்பெரிய துணையை உடையவரும் பிழைக்கமாட்டார்.