பெருமை
குறள் வரிசை
குறள்:971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
குறள் விளக்கம்:

ஒருவனது பெருமைக்குக் காரணம், மற்றவர் செய்யமுடியாதவற்றைத் தான் செய்யக் கருதும் ஊக்க மிகுதியாகும். ஒருவனுக்குத் தாழ்வாவது, அவ்வாறு செய்யமுயலாது வாழ்வோம் என எண்ணுதலாகும்.

குறள்:972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
குறள் விளக்கம்:

பிறப்பால் (மனிதர்கள் மட்டுமல்ல) எல்லா உயிர்களும் ஒன்றே. ஒவ்வொருவர் செய்கின்ற தொழிலால் மட்டுமே வேறுபாடு உண்டு, இதில் உயர்வு தாழ்வு (தொழிலால் தனி சிறப்பு) இல்லை.

குறள்:973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
குறள் விளக்கம்:

மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைக் குணம் இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.

குறள்:974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
குறள் விளக்கம்:

தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைப்பது போன்றப் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.

குறள்:975
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
குறள் விளக்கம்:

பெருமையுடைவர், எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறரால் செய்ய முடியாத செயல்களை முறைப்படி செய்து முடிக்க வல்லவராவர்.

குறள்:976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
குறள் விளக்கம்:

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவரது தன்மையைத் தாமும் அடையவேண்டும் என்னும் விருப்பம் சிறியோரின் மனத்தில் இராது.

குறள்:977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
குறள் விளக்கம்:

செல்வம் முதலிய சிறப்புகள் சீரற்ற சிறுமைக்குணம் உடையவரிடம் உண்டாகுமானால், அவர்கள் வரம்பு கடந்த செயல்களைச் செய்பவராவர்.

குறள்:978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
குறள் விளக்கம்:

பெருமையுடையவர் எப்பொழுதும் தாழ்ந்தொழுகுவர்; சிறுமையுடையவர் தம்மைத்தாமே மதித்துப் பெருமைப்படுத்திப் புகழ்வர்.

குறள்:979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
குறள் விளக்கம்:

பெருமைக் குணமாவது ஆணவமின்றி அடக்கமாக இருத்தல், சிறுமைக் குணமாவது ஆணவத்தினை அளவின்றிக் கொண்டிருத்தல்.

குறள்:980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
குறள் விளக்கம்:

பெருமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களை மறைப்பர். சிறுமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களையே கூறிவிடுவர்.