பேதைமை - அறியாமை
குறள் வரிசை
குறள்:831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
குறள் விளக்கம்:

அறியாமை என்று சொல்லப்படுவது யாது என்றால், கேடு தருகின்றவற்றைக் கைகொண்டு, இலாபம் தருபவற்றைக் கைவிடுதலாகும்.

குறள்:832
பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
குறள் விளக்கம்:

அறியாமைகள் எல்லாவற்றுள்ளும் பெரிய அறியாமை, தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம் ஆசை கொள்வதே ஆகும்.

குறள்:833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
குறள் விளக்கம்:

நாண வேண்டியவற்றிற்கு நாணாமையும், விரும்ப வேண்டியவற்றை விரும்பாமையும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமையும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமையும் அறியாமையுடையவனின் செயல்களாகும்.

குறள்:834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
குறள் விளக்கம்:

நூல்களை கற்று அறிந்தும், அறிந்தவற்றைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லியும், தான் கற்றபடி அடங்கி நடவாத அறிவில்லாதவன் போல் அறிவில்லாதவன் இல்லை.

குறள்:835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
குறள் விளக்கம்:

வரும் ஏழு பிறப்புகளிலும் தான் வருந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தை, அறியாமையுடையவன் இந்த ஒரு பிறப்பிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்.

குறள்:836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
குறள் விளக்கம்:

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன், ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் குற்றப்படுவான்; தான் விலங்கும் பூட்டப்பெறுவான்.

குறள்:837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
குறள் விளக்கம்:

அறிவில்லாதவன் பெருஞ்செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

குறள்:838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
குறள் விளக்கம்:

பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

குறள்:839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.
குறள் விளக்கம்:

அறியாமையுடையவனின் நட்பு மிகவும் இனிது; ஏனென்றால் பிரிவு உண்டாகும்போது அதனால் துன்பம் ஒன்றும் இல்லை.

குறள்:840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
குறள் விளக்கம்:

அறிவுடையோர் உள்ள சபையில் அறியாமை உடையவன் செல்லுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.