பொச்சாவாமை - மறதியை விலக்கல்
குறள் வரிசை
குறள்:531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
குறள் விளக்கம்:

செல்வம், பெருமிதம் ஆகியவற்றை எண்ணி வரக்கூடிய மிக்க மகிழ்ச்சியினால் வரும் மறதி, ஒருவனுக்கு அளவு கடந்த சினத்தைக் காட்டிலும் தீமை உடையதாகும்.

குறள்:532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
குறள் விளக்கம்:

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

குறள்:533
பொச்சாப்பார்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
குறள் விளக்கம்:

மறதியை உடையவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

குறள்:534
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
குறள் விளக்கம்:

உள்ளத்தில் அச்சம் உடையவர்க்கு தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

குறள்:535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
குறள் விளக்கம்:

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

குறள்:536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
குறள் விளக்கம்:

எவரிடத்தும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

குறள்:537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
குறள் விளக்கம்:

மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

குறள்:538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
குறள் விளக்கம்:

அறிவுடையோர் உயர்ந்தன என்று சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

குறள்:539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
குறள் விளக்கம்:

தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

குறள்:540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
குறள் விளக்கம்:

ஒருவன் தான் எண்ணியதை மறவாது நினைப்புடன் முயல்வானானால், அவன் எண்ணிய வண்ணமே அதை அடைதல் எளிதாகும்.