பொருள்செயல்வகை
குறள் வரிசை
குறள்:751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
குறள் விளக்கம்:

ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும், மதிக்கப்படுவராகச் செய்யவல்ல செல்வத்தைத் தவிர வேறு பொருள் இல்லை.

குறள்:752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
குறள் விளக்கம்:

பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வார்கள்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வார்கள்.

குறள்:753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
குறள் விளக்கம்:

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

குறள்:754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
குறள் விளக்கம்:

பொருள் சம்பாதிக்கும் வகை அறிந்து, பிறர்க்குத் தீமை செய்யாது வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

குறள்:755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
குறள் விளக்கம்:

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

குறள்:756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
குறள் விளக்கம்:

மக்கள் இயல்பாய்த் தரும் பொருளும், வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி பொருளும், தன் பகைவரை வென்று வரும் கப்பப் பொருளும் அரசனுக்குரிய பொருள்களாகும்.

குறள்:757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
குறள் விளக்கம்:

அன்பு என்னும் தாய் பெற்ற அருள் என்கிற குழந்தை, பொருள் என்றுக் சொல்லப்படும் செல்வமுடைய வளர்ப்புத் தாயால் வளரும்.

குறள்:758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
குறள் விளக்கம்:

தனது கையிலே பொருளை வைத்துக்கொண்டு ஒரு செயலைச் செய்வது, ஒருவன் மலைமீது ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

குறள்:759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்.
குறள் விளக்கம்:

பொருளைத் தேடிச் சேர்த்தல் வேண்டும்; அது பகைவர் செருக்கைக் கெடுக்கும் ஆயுதமாகும்; அதுபோலக் கூரிய ஆயுதம் வேறு இல்லை.

குறள்:760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
குறள் விளக்கம்:

நல்வழியில் வரும் பொருளை அதிகமாக ஈட்டியவர்க்கு அறமும் இன்பமும் ஒரு சேரக்கிட்டுவனவாகும்.