மன்னரைச் சேர்ந்தொழுதல் - மன்னரைச் சேர்ந்துஒழுகல்
குறள் வரிசை
குறள்:691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
குறள் விளக்கம்:

அடிக்கடி மனம் மாறுபடும் மன்னரைச் சேர்ந்து பணி செய்வோர், அவரை மிக நீங்காமலும், நெருங்காமலும் நெருப்பினிடத்துக் குளிர் காய்பவர் போன்று நடந்து கொள்ளுதல் வேண்டும்.

குறள்:692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.
குறள் விளக்கம்:

மன்னர் விரும்பியவற்றைத் தாம் விரும்பாதிருத்தல், மன்னரால் நிலையான செல்வத்தைக் கொடுக்கச் செய்யும்.

குறள்:693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
குறள் விளக்கம்:

தன்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம்மிடம் பிழைகள் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்; மன்னர் சந்தேகம் கொண்டு விட்டால், பின்னர் அவரைத் தெளிவித்தல் யார்க்கும் அரிதாகும்.

குறள்:694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
குறள் விளக்கம்:

சிறப்புமிகுந்த அரசர் அருகில் இருக்கும்போது, மற்றவர் காதிலே மறைவாகச் சொல்லுதலையும், மன்னருடன் சேர்ந்து சிரித்தலையும் நீக்கி நடத்தல் வேண்டும்.

குறள்:695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
குறள் விளக்கம்:

மன்னர் பிறரோடு இரகசியம் பேசும்போது அதனை உற்றுக்கேட்டலும் வற்புறுத்திக் கேட்டலுமின்றி, அவராகவே கூறும்பொழுது கேட்கவேண்டும்.

குறள்:696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
குறள் விளக்கம்:

அரசனது மனநிலையை அறிந்து, தக்க காலம் பார்த்து, வெறுக்காததையும் விரும்புகின்றதையும் அவர் விரும்பும்படி சொல்ல வேண்டும்.

குறள்:697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
குறள் விளக்கம்:

அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டாலும் ஒருபோதும் சொல்லாதிருக்க வேண்டும்.

குறள்:698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
குறள் விளக்கம்:

(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

குறள்:699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
குறள் விளக்கம்:

கலக்கமற்ற தெளிந்த அறிவை உடையவர்கள், தாம் அரசரால் மிகவும் மரியாதைக்கு உரியவர் என்று எண்ணி, அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

குறள்:700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
குறள் விளக்கம்:

அரசனுக்கு யாம் பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தாகதனவற்றைச் செய்யும் உரிமை கேட்டினைத் தரும்.