வினைத்திட்பம்
குறள் வரிசை
குறள்:661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
குறள் விளக்கம்:

ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

குறள்:662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
குறள் விளக்கம்:

இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

குறள்:663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
குறள் விளக்கம்:

செய்யப்படும் செயலையெல்லாம் மறைத்து முடிவில் வெளிப்படுமாறு செய்வதே வலிமையாகும்; செய்யும்போது இடையில் வெளிப்பட்டால், அதனால் செய்கின்றவனுக்கு நீங்காத துன்பம் வரும்.

குறள்:664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
குறள் விளக்கம்:

ஒரு செயலைச் செய்வோமெனச் சொல்லுதல் எவருக்கும் எளிது; ஆனால், சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

குறள்:665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
குறள் விளக்கம்:

செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

குறள்:666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
குறள் விளக்கம்:

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு மன உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

குறள்:667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
குறள் விளக்கம்:

உருண்டு செல்கின்ற பெரிய தேர் அச்சில் இருந்து தாங்கும் சிறிய அச்சாணி போன்று பயனுடையவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால், ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழ்தல் கூடாது.

குறள்:668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
குறள் விளக்கம்:

மனம் தெளிந்து செய்யத் துணிந்த ஒரு செயலைத் தளர்ச்சியும்,காலந்தாழ்த்தாமலும் விரைந்து செய்து முடிக்க வேண்டும்.

குறள்:669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
குறள் விளக்கம்:

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

குறள்:670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
குறள் விளக்கம்:

செய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை, அவரிடத்தில் வேறு எந்த வலிமை இருந்தாலும் உலகத்தவர் மதிக்க மாட்டார்.