வினைத்தூய்மை - நெறிபிறழாத செயல்
குறள் வரிசை
குறள்:651
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
குறள் விளக்கம்:

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

குறள்:652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
குறள் விளக்கம்:

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எக்காலத்திலும் செய்யாமல் அவற்றை விட்டுவிட வேண்டும்.

குறள்:653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
குறள் விளக்கம்:

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புவோர், தம்முடைய மதிப்பைக் கெடுப்பதற்குக் காரணமான செயலை விடுதல் வேண்டும்.

குறள்:654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
குறள் விளக்கம்:

தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

குறள்:655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
குறள் விளக்கம்:

என்ன இப்படிச் செய்து விட்டோமே என நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக்கூடாது. ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

குறள்:656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
குறள் விளக்கம்:

தனது வறுமையின் காரணமாக, தன்னைப் பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், நிறைந்த அறிவினையுடையவர் பழிக்கத்தக்க செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும்.

குறள்:657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
குறள் விளக்கம்:

பழியை மேற்கொண்டு இழிந்த செயல் செய்து பெறும் செல்வத்தை விட நேர்மையாளராக இருந்து அடையத்தக்க வறுமையே மேலானது.

குறள்:658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
குறள் விளக்கம்:

பெரியோர் விலக்கியவற்றை தாமும் விலக்காமல் செய்தவர்க்கு, அவை ஒருவாறு முடிந்தனவாயினும் பின்பு துன்பம் தரும்.

குறள்:659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
குறள் விளக்கம்:

பிறர் அழுது வருந்தும்படி ஒருவன் கொண்ட பொருள், அவனும் அவ்வாறே அழுது வருந்தும்படி போய்விடும். நல்வழியில் வந்த பொருளை முன் இழந்தாலும், அது பின் வந்து பயன் கொடுக்கும்.

குறள்:660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
குறள் விளக்கம்:

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பானையில் நீரை ஊற்றிக் காப்பது போன்றது.